அமெரிக்காவிற்கு சவால் ‘தேவை ஏற்பட்டால் ஏவுகணை சோதனை’ ஈரான் அதிரடி
28 Jul,2019
அமெரிக்காவிற்கு சவால் விடுத்துள்ள ஈரான் ‘தேவை ஏற்பட்டால் ஏவுகணை சோதனை’ மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.
அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு மே மாதம் விலகியது.
இதனால் அதிருப்தி அடைந்த ஈரான் அந்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறி அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகப்படுத்தியது. இதற்கிடையே அமெரிக்கா- ஈரான் இடையிலான மோதல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் ஈரான் நடுத்தர ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் இதுகுறித்து ஈரான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக ஏவுகணை சோதனை நடத்தப்படும் என்றும், அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ஈரானின் ஏவுகணை என்பது முற்றிலும் தற்காப்புக்கானது. வேறு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. எனவே தேவை ஏற்படுமாயின் ஈரான் நிச்சயமாக ஏவுகணையை சோதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏவுகணை சோதனையின் நோக்கம் ஈரானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு பதிலளிப்பதே ஆகும். அதோடு ஈரான் தன்னை தற்காத்து கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். அதற்கு உலகில் எந்த சக்தியின் அனுமதியும் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.