அனுமதி கிடைத்தது ; எல்லை சுவர் எழுப்ப தயராகும் ட்ரம்ப்
28 Jul,2019
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருவதை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இராணுவ நிதியை பயன்படுத்திக் கொள்ள அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மெக்சிகோவையொட்டிய எல்லை வழியாக ஏராளமானோர் அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைவதைத் தடுப்பதற்கு எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்கு நிதியை ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ட்ரம்ப் கோரிக்கை வைத்தார்.
இதற்கு ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதன் மூலம் இராணுவ நிதியை மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப அவர் பயன்படுத்த முடியும்.
அதன்படி எல்லை சுவர் திட்டத்துக்கு 1.5 பில்லியன் டாலரை நிதியாக ஒதுக்க அமெரிக்க இராணுவ தலைமையகம் ஒப்புதல் வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் சார்பில் 20 மாகாணங்களின் அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தன. இதில் கலிபோர்னியா மாநிலத்தின் மத்திய நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு இராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதித்தார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் உயர் நீதமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எல்லைச்சுவரின் ஒரு பகுதியை கட்டி முடிப்பதற்கு 2.5 பில்லியன் டாலர் ராணுவ நிதியை பயன்படுத்துதற்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு, கலிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிகோ மாகாணங்களில் தெற்கு எல்லைச்சுவர் கட்டப்படவுள்ளது.