இறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்: மியன்மாரிலிருந்து மலேசியாவுக்கு கடத்தும் முயற்சி
25 Jul,2019
மலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக தெற்கு தாய்லாந்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மியன்மார் நாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரகர்கள் மூலம் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் தாய்லாந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இறப்பர் தோட்டம் ஒன்றில் 54 ஆண்களும் 3 பெண்களும் இருந்த பொழுது சுற்றிவளைத்ததாக தாய்லாந்து கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு கைது நடவடிக்கையில் மலேசியாவுக்கு மக்களை கடத்தும் வழக்கமான தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டதால், புதிய தரகர் வரும் வரை இரப்பர் தோட்டத்தில் இருக்கமாறு அழைத்து வந்த தரகர் தெரிவித்திருக்கிறார்.
தாய்லாந்தின் சோங்கிலா மாகாணத்திலிருந்து மலேசிய எல்லை சுமார் 100 கிலோ மீட்டருக்குள் அமைந்திருப்பதால், இவ்வழியாக அண்டை நாட்டுத் தொழிலாளர்கள்/ குடியேறிகள்/ அகதிகள் கடத்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகின்றது. இப்பகுதியில் குடியேறிகள் வாரந்தோறும் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகின்றது.
இதில் பெரும்பான்மையாக வறுமையில் சிக்கியுள்ள மியன்மார், லாவோஸ், கம்போடிய நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவணங்களின்றி இடம்பெயருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.