அதிபரின் பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்திய ஆசிரியை எதிர்கொண்ட அவலம்
25 Jul,2019
அதிபரின் ஆபாச உரையாடல்களை தொலைபேசியில் பதிவு செய்து அம்பலப்படுத்தியமைக்காகசிறைத்தண்ட விதிக்கப்பட்ட இந்தோனேசிய ஆசிரியைக்கு அந்தநாட்டின் நாடாளுமன்றம் பொது மன்னிப்பை வழங்கியுள்ளது.
இந்தோனேசியாவின் லொம்பொக் தீவில் ஆசிரியையாக பணியாற்றும் பைக் நுரில் மக்னன் தனது பாடசாலை அதிபரின் ஆபாச தொலைபேசி உரையாடலை பதிவு செய்திருந்தார்.
2012 இல் இது இடம்பெற்றது.
அதிபரிற்கு எதிராக முன்னர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்திருந்தார்.
தனது பதிவை இவர் மற்றொருநபரிடம் வழங்கியதை தொடர்ந்து அந்த நபர் அதனை பகிரங்கப்படுத்தினார்.
இதன் காரணமாக குறிப்பிட்ட பாடசாலை அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
எனினும் அவர் பைக் நுரில் மக்னனிற்கு எதிராக பொலிசில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.
இது குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்தோனேசியாவின் உச்சநீதிமன்றம் ஆசிரியருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனையை விதித்தது.
எனினும் இந்த தீர்ப்பிற்கு இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இவ்வாறான தீர்ப்பு காரணமாக பாலியல்வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்கள் உண்மைகளை தெரிவிப்பதற்கு தயங்கும் நிலையேற்படலாம் என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்நிலையிலேயே இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஆசிரியைக்கு பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்.
இந்தோனேசிய நாடாளுமன்றமும் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.