நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்
21 Jul,2019
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்கும் அவர் பிறநாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான எண்ணங்களை கொண்டு உள்ளார். இதனால் அவர் அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்லவேண்டும் என டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டார். இது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதற்கிடையே நியூயார்க் நகரில் ப்லோரல் பார்க் பகுதியில் இந்து சாமியார் சுவாமி ஹரிஸ் சந்தர் புரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழன் கிழமை 11 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள். சாமியார் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஜூலை 18-ம் தேதி நடந்த தாக்குதலின் போது அவரது முகம் உட்பட அவரது உடல் முழுவதும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. “நான் வேதனையில் இருக்கிறேன்,” என்று மட்டும் சாமியார் கூறியுள்ளார்.