பாரசீக வளைகுடாவில் பதட்டம் : கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
20 Jul,2019
அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் ஆன அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.
கடந்த மாதம் ஈரானின் வான்பரப்புக்குள் நுழைந்து உளவு பார்த்த அமெரிக்கா ஆளில்லா விமானத்தை ஈரான் புரட்சிகர படை சுட்டு வீழ்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஜ் ஜலசந்தியில் அமெரிக்க போர்க் கப்பல் மற்றும் அதில் இருந்த ராணுவ வீரர்களை அச்சுறுத்தும் வகையில் பறந்த ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதை ஈரான் மறுத்துள்ளது. தங்கள் நாட்டு விமானம் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என கூறியுள்ளது. இருந்தும் பாரசீக வளைகுடா பகுதியில் போர் பதட்டம் நிலவுகிறது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. ஏனெனில் சர்வதேச அளவில் வளைகுடா நாடுகளில் பெறப்படும் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் 20 சதவீத கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதி வழியாக தான் செல்கின்றன.
தற்போது இங்கு பதட்டம் நிலவுவதால் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை வர்த்தக நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது.