ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் - புதிய தகவல்
20 Jul,2019
ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்குஅமெரிக்கா நவீன ரக ஆயுதமொன்றை பயன்படுத்தியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைத்து வகையான வாகனங்களிலும் பொருத்தி பயன்படுத்தக்கூடிய அமெரிக்க கப்பல்களில் இருந்து எதிரி விமானங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடிய மரைன் படையணியின் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு ஆயுதத்தையே அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.
எல்எம்ஏடிஐஎஸ் என்ற ஆயுதமே அமெரிக்க கடற்படை கப்பலி;ற்கு அருகில் சென்ற ஈரானின் டிரோனை செயல் இழக்க செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த மரைன் படைப்பிரிவின் விசேட படையணியொன்று இந்த வகை ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
2200 பேரை கொண்ட இந்த படையணி தற்போது அமெரிக்காவின் கடற்படை கப்பலான யுஎஸ் பொக்சரில் உள்ள விசேட படையணியொன்றுடன் இணைந்து செயற்படுகின்றது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வகை ஆயுதத்தை நிலத்திலே பயன்படுத்துவது வழமை எனினும் தற்போது பல கப்பல்களில் பொருத்தி அமெரிக்கா பரிசோதனை செய்கின்றது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஆயுதத்தினால் ராடார்கள் மற்றும் கமராக்களை பயன்படுத்தி வான்வெளியில் பறக்கும் விமானங்களை கண்காணிக்க முடியும் எதிரிவிமானங்களை தனியாக அடையாளம் காணும் திறனும் இந்த வகை ஆயுதங்களிற்கு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: டிரம்ப் தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே, அதாவது 1000 யார்டுகள் வரை நெருங்கி அச்சுறுத்தும் வகையில் ஈரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்தது. உடனடியாக அந்த விமானத்தை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அமெரிக்காவின் எச்சரிக்கையை புறக்கணித்து ஈரான் விமானம் வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
வீரர்களையும், நாட்டு நலன்களையும் தற்காத்துக்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு இருக்கிறது. அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாக செயல்படும் ஈரானுக்கு அனைத்து நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தங்கள் நாட்டின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து தங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று ஈரான் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.