துருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை : டிரம்ப்
18 Jul,2019
துருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் அமெரிக்காவின் அதிநவீன F-35 ரக போர் விமானம் வாங்க துருக்கி அரசு செய்திருக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும், விமானம் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிக்காக அமெரிக்கா வந்துள்ள துருக்கி நாட்டு விமானிகளை அதற்கு மேல் எங்கள் நாட்டில் தங்கவிட மாட்டோம் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி S-400 ஏவுகணைகள் தடுப்பு கவன்களில் முதல் கவனை கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி அரசு பெற்றுக் கொண்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:
அமெரிக்காவுடன் துருக்கி பல ஆண்டுகளாக நல்லுறவை கடைப்பிடித்து வருகிறது. ஆனாலும் ரஷியாவிடம் இருந்து துருக்கி S-400 ஏவுகணைகளை தடுப்பு கவனை வாங்கியது முற்றிலும் நியாயமற்ற செயல். இதனால் இருநாட்டுக்கும் இடையேயான உறவு தற்போது கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக துருக்கிக்கு அதிநவீன F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.