எத்தகைய நிலைமையிலும் எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம் - ஈரான்
16 Jul,2019
ஈரான் எத்தகைய நிலைமையின் கீழும் தனது எண்ணெய் ஏற்றுமதிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரிப் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரித்தானிய வெளிநாட்டுச் செயலாளர் ஜெரேமி ஹன்ட்டுடன் தொலைபேசி மூலம் மேற்கொண்ட உரையாடலின் போது இவ்வாறு தெரிவித்ததாக ஈரானிய வெளிநாட்டு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ளது.
பிரித்தானிய கடற்படையினரால் மத்தியதரைக் கடலிலுள்ள பிரித்தானிய பிராந்தியமான கிப்ரால்டருக்கு அப்பால் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஈரானிய கிரெஸ் ஒரு எண்ணெய் தாங்கிக் கப்பலை விரைவில் விடுவிக்க அவர் இதன்போது கோரியுள்ளார்.
அந்தக் கப்பல் சிரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளை மீறும் வகையில் அந்நாட்டுக்கு எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெரேமி ஹன்ட் தன்னால் டுவிட்டரில் வெளியிடப்பட்ட செய்தியில், அந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் சிரியாவுக்கு செல்லாது என உத்தரவாதமளிக்கப்படும் பட்சத்தில் பிரித்தானியா அதனை விடுவிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.