நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஈரானியக் கப்பல் விடுவிக்கப்படும்
14 Jul,2019
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய் கப்பல் மீண்டும் சிரியாவுக்கு அனுப்பப்படமாட்டாது என்று உறுதியளித்தால், அதனை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் மேற்கொள்ளும் என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிரேஸ்-1 எனப்படும் எண்ணெய் கப்பல் விவகாரம் தொடர்பாக ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் நடத்திய பேச்சுகளின்போதே பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானது எனவும் தன்னிடம் பிரச்சினைகளை தீர்க்க ஈரான் விரும்புகிறதே அன்றி, பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது கப்பலை பிரித்தானயா விரைவில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் எவ்வாறான சூழ்நிலையிலும் தமது எண்ணெய் ஏற்றுமதி செயற்பாடுகளை நிறுத்தப் போவதில்லை என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர், ஜெரமி ஹண்ட்டிடம் தெரிவித்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் சிரியாவிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை மீறும் வகையில் எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகின்றது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரித்தானிய றோயல் கடற்படையினரால் கடந்த வாரம் கிரேஸ் – 1 என்ற எண்ணெய் கப்பல் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் விடயம் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.