பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அமைச்சர்கள் அதிகாரிகள்-
13 Jul,2019
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவது பிபிசி மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் உலக அறிக்கைகளில் பெண்களிற்கு ஆபத்தான நாடாக பதிவாகிவருகின்றது.
இந்த பின்னணியிலேயே பிபிசி இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் என்னை தொடர்ச்சியாக துன்புறுத்தினார் ஒரு நாள் என்னை அலுவலகத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என அமைச்சர் கீழ் முன்னர் பணிபுரிந்த பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி எனினும் தனது அனுபவங்களை உலகம் அறிந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த அமைச்சர் நேரடியாக என்னிடம் அந்த விடயத்தை கேட்டார், நான் நீங்கள் அனுபவம் மிக்கவர் தகுதி வாய்ந்தவர் உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தேன் என அந்த பெண்மணி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நான் அங்கிருந்து வெளியே முற்பட்டவேளை அவர் எனது கையை இழுத்து பின்னறைக்கு கொண்டு செல்ல முயன்றார் நான் அவரிடம் என்னை சத்தமிட வைக்காதீர்கள் என குறிப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினேன் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.
நான் பொலிஸாரிடம் முறையிடவில்லை எனது வேலையை இராஜினாமா செய்தேன் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி நான் அரசாங்கத்தை நம்பவில்லை,நீங்கள் நீதிமன்றத்திற்கோ பொலிஸாரிடமோ சென்றால் அவர்கள் எவ்வளவு ஊழல் மிகுந்தவர்கள் என்பது உங்களிற்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நீங்கள் உங்களிற்கு நடந்ததை பகிரங்கமாக தெரியப்படுத்தினால் அனைவரும் பெண்களையே குற்றம்சொல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளாhர்.
குறிப்பிட்ட அமைச்சர் தங்களை பாலியல் வன்முறைக்கு உட்படு;த்தினார் என வேறு இரு பெண்கள் தன்னிடம் தெரிவித்தனர் என அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சர் எந்த வெட்கமும் இன்றி அச்சமின்றி இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார் என அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆப்கான் ஜனாதிபதி அஸ்ரவ் கானியின் நெருங்கிய சகாவொரு பாலியல் உறவில் ஈடுபடுமாறு கோரினார் என மற்றொரு பெண் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
நான் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன் வேலை கிடைப்பது உறுதியாகியிருந்த நிலையில் ஆப்கான் ஜனாதிபதி; அஸ்ரவ் கானியின் நெருங்கிய சகாவை சந்திக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் அந்த நபரை சந்தித்தவேளை அவர் தான் என்னுடைய ஆவணங்களில் கைச்சாத்திடுவதாக தெரிவித்ததுடன் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறும் தன்னுடன் சேர்ந்து மது அருந்துமாறும் கேட்டுக்கொண்டார் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.
அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது நான் அங்கிருந்து அச்சத்துடன் வெளியேறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் அதன் பின்னர் அரச அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வேலை குறித்து கேட்டேன் ஆனால் அவர்கள் உங்கள் வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்டது நீங்கள் அதனை எடுக்க மறுத்துவிட்டீர்கள் என குறிப்பிட்டனர் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆப்கான் ஜனாதிபதியின் அலுவலகம் இது தொடர்பான பேட்டிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதுமின்னஞ்சல்களிற்கும் பதிலளிக்கவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.