பிரிட்டன் கப்பலை பிடிக்க நினைத்த ஈரான் –
11 Jul,2019
வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரானின் இந்த நடவடிக்கைகள் “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று அவர் கூறியுள்ளார்.தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது.
இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை சேர்ந்ததாக நம்பப்படும் படகுகள் வளைகுடாவுக்கு வெளியே ஹோர்முஸ் நீரிணைக்குள் நகர்ந்து கொண்டிருந்ததை, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை நெருங்கி, நிறுத்த முயற்சித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.