டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜினாமா
11 Jul,2019
அமெரிக்காவுக்கான பிரிட்டன் நாட்டின் தூதரான கிம் டர்ரோச் பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய ரகசிய கடிதம் சமீபத்தில் எப்படியோ கசிந்து விட்டது. அந்த கடிதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும், அவரது அரசையும் கிம் டர்ரோச் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தகுதியற்றவர். பாதுகாப்பற்ற நிலையிலேயே அவர் இருக்கிறார். வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் ஆகியவை நிலவுவதாக வெளியாகும் செய்திகளை டிரம்ப் மறுக்கிறார். ஆனால், அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான்.
டிரம்ப்
வெள்ளை மாளிகை செயல்படாத நிலையிலேயே இருக்கிறது. அவமானத்தை சுமந்தபடியே டிரம்ப் அரசின் பதவிக்காலம் முடியப்போகிறது’ என தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ரகசிய கடிதம் வெளியானதால், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விமர்சனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பதிலடி கொடுத்தார்.
அமெரிக்க அதிபர் பற்றிய பிரிட்டன் தூதரின் பகிரங்க விமர்சனத்தால் இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் கிம் டர்ரோச் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘தற்போது நிலவும் சூழலில் நான் நினைத்தவாறு எனது பணிகளை நிறைவேற்றுவது சாத்தியமல்ல என்பதை உணர்கிறேன்.
இந்த தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ரகசிய கடிதம் கசிந்து வெளியில் அம்பலமானதால் எனது தூதர் பதவி மற்றும் பதவிக்காலம் தொடர்பான ஏகப்பட்ட சந்தேகங்கள் சூழ்ந்துள்ளன. எனவே, அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்