சவுதி அரேபியா விமான நிலையங்களில் குட்டி விமானம் மூலம் தாக்குதல்!
08 Jul,2019
சவுதி அரேபியாவில் உள்ள இரு விமான நிலையங்களில், குட்டி விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். சவுதிக்கும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது.
ஏமன் நாட்டு அதிபரான மன்சூர் ஹைதிக்கு சர்வதேச ஆதரவு அளித்து வரும் சவுதி அரேபியா, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனை கண்டிக்கும் வகையில், சவுதியின் விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை குறிவைத்து, அங்குள்ள ஜிஜான்(Jizan) மற்றும் அபா(abha) விமான நிலையங்களில் வெடிகுண்டு பொறுத்திய டிரோன்களை கிளர்ச்சியாளர்கள் வெடிக்க செய்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்ற போதும், இதுவரை சவுதி அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. கடந்த மாதம், கிளர்ச்சியாளர்கள் சவுதி விமான நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.