அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் : டிரம்ப் அறிவிப்பு
07 Jul,2019
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை தொடங்க இருந்த அவர் கடந்த மாதம் ஒத்தி போட்டார்.
இந்த நிலையில், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் தொடங்கி விடும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள். பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களைத்தான் நாங்கள் அகற்றுகிறோம்” என குறிப்பிட்டார்.
ஆனால் புலம் பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த குழுக்கள் குறிப்பிடுகையில், “இந்த பொதுவான அச்சுறுத்தல் சமூகங்களுக்கும், அமெரிக்க பொருளாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும். ஏனென்றால் பெரியவர்கள் வேலைகளை இழக்கவும், குழந்தைகள் பள்ளிகளை தவிர்க்கும் சூழலும் உருவாகும்” என்றன.