சிட்னி நகரின் முக்கிய இலக்குகளை தாக்கும் ஐஎஸ் திட்டம் முறியடிப்பு
02 Jul,2019
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிட்னியின் மேற்குபகுதியில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது மூவரை கைதுசெய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரில் இசாக் எல் மத்தாரி என்ற 20 வயது நபர் சிட்னியின் காவல்நிலையங்கள் துணைதூதரங்கள், நீதிமன்றங்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவருடன் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் மத்தாரியும் மற்றொரு நபரும்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மத்தாரி அவுஸ்திரேலியாவில் தாக்குதலை மேற்கொள்வதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டதுடன் தாக்குதலிற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நபர் கடந்த வருடம் லெபனானிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்த தருணம் முதல் அவரை கண்காணித்து வந்துள்ளோம் என அவுஸ்திரேலிய காவல்துறையின் பிரதி ஆணையாளர் லான் மக்கார்ட்னி தெரிவித்துள்ளார்.
இந்த நபர் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் அமைப்புடன் இணைந்து போரிடுவதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2014 இற்கு பின்னர் 16 வது சதி முயற்சியை முறியடித்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடமுயல்பவர்கள் இன்னமும் உள்ளனர் ஆனால் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றோம் மக்கள் பாதுகாப்பே எங்களிற்கு முக்கியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.