ஹாங்காங்கில் வலுக்கும் போராட்டம் - பாராளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர்
02 Jul,2019
சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் இன்று போலீஸ் பாதுகாப்பை தகர்த்தெறிந்து பாராளுமன்றத்துக்குள் புகுந்தனர்.
ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்படைப்பு சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டு இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் பாராளுமன்றத்தின் அருகே தீவிரமான போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டனர். சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை கொண்டு வந்த ஹாங்காங் தலைமை நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த வன்முறை மற்றும் போலீசாரின் நடவடிக்கையில் பலர் காயமடைந்தனர்.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் அரசு பணிந்தது. சர்ச்சைக்குரிய நாடு கடத்தும் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு பொறுப்பேற்று, ஹாங்காங் தலைமை நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஹாங்காங் முழுவதும் போராட்டம் வெடித்தது.
ஹாங்காங் நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுமார் 20 லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தியதால், தலைமை நிர்வாகி கேரி லாம் மன்னிப்பு கோரினார். ஆனால் பதவி விலக மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தங்களது முயற்சியில் சற்றும் பின்வாங்காத போராட்டக்காரர்கள் இன்று போலீசாரின் தடுப்பு வேலிகளை தகர்த்து எரிந்தனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் தாக்குதல் நடத்தினர்.
இவற்றை எல்லாம் பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.