ஊழல்வாதிகளுக்கு புகலிடம் மறுப்போம் என்று ஜி-20 உச்சி மாநாட்டில் தலைவர்கள் கூட்டு பிரகடனம் வெளியிட்டனர்.
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி-20 உச்சி மாநாடு, நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வந்தது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த உச்சி மாநாடு நேற்று முடிந்தது.
இதன் முடிவில் தலைவர்களால் கூட்டு பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* சர்வதேச வர்த்தகம், முதலீடு ஆகியவை வளர்ச்சி, உற்பத்தி, புதுமை, வேலை வாய்ப்பு உருவாக்கம், வளர்ச்சி ஆகியவற்றின் என்ஜின்கள் ஆகும்.
* தாராளமான, நியாயமான, பாகுபாடற்ற, வெளிப்படையான, கணிக்கக்கூடிய மற்றும் நிலையான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
* உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் மேம்படுவதற்கு, அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
* உலக பொருளாதார வளர்ச்சி குறைவாகவே உள்ளது. முக்கியமாக வர்த்தகம், புவிசார் பதற்றங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த அபாயங்களை எதிர்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்போம்.
* வலுவான, நிலையான, சீரான, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கு கொள்கை ரீதியிலான கருவிகளை பயன்படுத்துவதற்கு மறு உறுதி எடுத்துக் கொள்வோம்.
* வெளிநாட்டு லஞ்சத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவோம். ஒவ்வொரு ஜி-20 உறுப்பு நாட்டிலும் வெளிநாட்டு லஞ்சத்தை குற்றமாக்கும் வகையில் கூடிய விரைவில் தேசிய சட்டம் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வோம்.
* ஊழல்வாதிகளுக்கும் அவர்களது வருமானத்துக்கும் புகலிடம் மறுப்பதற்கும், அவர்களின் சொத்துக்களை மீட்பதற்கும் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.