மத்திய கிழக்கிற்கு அதிநவீன போர்விமானங்களை அனுப்பியது அமெரிக்கா
30 Jun,2019
ஈரானுடனான பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது அதிநவீன எவ்22 ஸ்டெல்த் போர் விமானங்களை கட்டாரிலுள்ள தனது தளத்திற்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்க விமானப்படையின் மத்திய கட்டளைப்பணியகம் இதனை அறிவித்துள்ளது.
கட்டாரில் உள்ள உடெய்ட் விமானப்படை தளத்திற்கு போர் விமானங்கள் சென்றுள்ளன என அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
கட்டாரிற்கு அனுப்பபட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்க விமானப்படை வெளியிடாத அதேவேளை விமானப்படையினால் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஐந்து விமானங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க படையினரையும் அமெரிக்காவின் நலன்களையும் பாதுகாப்பதற்காகவே முதல் தடவையாக கட்டாரிற்கு போர் விமானங்கள் அனுப்ப பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானுடன் யுத்தம் ஏற்பட்டால் ஈரானின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இலக்குவைப்பதற்கு இந்த வகை விமானங்களை அமெரிக்க பயன்படுத்தலாம் என போரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் எஸ்-300 வான்பாதுகாப்பு பொறிமுறையை இலக்குவைக்க இந்த விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தாலம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா முதலி; எஸ் 300 வான்பாதுகாப்பு பொறிமுறையையே இலக்கு வைக்கும் அதனை இலக்கு வைத்தால் அமெரிக்க விமானங்கள் பாதுகாப்பாக செயற்படும் நிலை உருவாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த விமானங்களை அனுப்பியதன் மூலம் அமெரிக்கா மோதல் ஆரம்பமாவதை தடுக்க முயல்கின்றது ஆரம்பிக்க முயலவில்லை என முன்னாள் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.