தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மல்யுத்தம்- சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
26 Jun,2019
பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடந்த விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு ஏற்பட்டதால், அந்த இடம் மல்யுத்தக் களமாக மாறியது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு செய்தித் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசியல் தொடர்பான தலைப்பில் பேசும்போது, பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் - இ- இன்சாப் கட்சி நிர்வாகி மசூர் அலி சியால், கராச்சி பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் இம்தியாஸ் கான் பாரன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கி பேசினர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை அடக்க முடியாமல் இருக்கையில் இருந்து எழுந்த சியால், இம்தியாஸ் கானை நெட்டித் தள்ளி தாக்கினார். அவரும் பதிலுக்கு தாக்கினார். நேரலை என்ற நினைவு கூட இல்லாமல் மாறி மாறி அடித்துக்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக அங்கிருந்த ஊழியர்கள் சண்டையை விலக்கிவிட்டனர். டிவி நேரலை விவாத நிகழ்ச்சி மல்யுத்த களமாக மாறிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. சியால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்