ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பினை கொண்டுள்ள 55 ஆயிரம் பேர் கைது
24 Jun,2019
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பினை கொண்டுள்ள 55 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் தலைவர் மிச்சல் பச்லற் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பல வெளிநாட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தி சட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான மூன்று வாரகால நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
சுமார் ஐம்பது நாடுகளில் செயல்பட்ட 55 ஆயிரம் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், அதிக வசதிகள் அற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்களை அந்த அந்த நாட்டவர்கள் ஏற்க வேண்டும் என சிரிய அரசாங்கம் கோரியுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயல்படும் சிரிய ஜனநாயக அமைப்பினரே பெரும்பாலானவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத ஆயுததாரிகளின் குடும்ப அங்கத்தவர்களை அவர்களது நாடுகளுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்