ஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்
24 Jun,2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டத்தை கைவிட்டிருந்த நிலையில் அந்நாட்டு ஆயுத முறைமைகள் மீது இணையதளம் மூலமான சைபர் தாக்குதலொன்றை ஆரம்பித்துள்ளதாக அமெரிக் காவிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்த சைபர் தாக்குதலானது ஈரானின் ஏவுகணை மற்றும் ஏவுகணையை ஏவும் உபகரணங்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் கணினி முறைமைகளை செயலிழக்க வைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரானால் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் மற்றும் அந்நாட்டால் அமெரிக்க ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை என்பவற்றுக்கு பதிலடி நடவடிக்கையாகவே இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் ஊடகம் தெரிவிக்கிறது.
அமெரிக்க ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை ஈரானிய எல்லைகளை மீறுவது தொடர்பில் அமெரிக்காவுக்கான ஒரு சிவப்பு எச்சரிக்கை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கூறுகிறது.
அந்த ஆளற்ற விமானத்துக்கு அருகில் 35 பேர் வரையானோரை ஏற்றிச் செல்லக் கூடிய இராணுவ விமானமொன்றும் பறந்ததாகவும் அதனையும் தாம் சுட்டு வீழ்த்தியிருக்க முடியும் எனவும் ஆனால் தாம் அதனைச் செய்யவில்லை எனவும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் உயர் மட்ட அதிகாரியான அமீர் அலி ஹஜிஸ்டெல்லாஹ் குறிப்பிட் டிருந்தார்.