ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் இன்று முதல்
24 Jun,2019
ஈரான் அணு ஆயுதங்களை உடைமையாகப் பெற்றுக் கொள்வதை தடுக்கும் வகையில் அந்நாட்டுக்கு எதிராக பிரதான மேலதிக தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய தலைமைத்துவம் தாம் பயணிக்கும் பாதையை மாற்றிக் கொள்ளாத வரை அந்நாட்டின் மீதான பொருளாதார அழுத்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என அவர் கூறினார்.
"நாம் மேலதிக தடைகளை நடைமுறைப்படுத்துகிறோம். சில விடயங்களில் நாம் வேகமான நடவடிக்கை எடுப்போம்" என டொனால்ட் ட்ரம்ப் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறினார்.
தனது அணு சக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணக்கம் காணப்பட்ட வரையறையை தான் தாண்டவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையிலேயே ட்ரம்பின் மேற்படி எச்சரிக்கை வெ ளியாகியுள்ளது.
ஈரானானது 2015 ஆம் ஆண்டு உலக அதிகார சக்திகளுடன் செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் தனது நாட்டுக்கு எதிரான தடைகளை அகற்றுவதற்குப் பதிலாக தன்னிடமுள்ள செறிவாக்கப்பட்ட யுரேனிய கையிருப்பை மட்டுப்படுத்த இணக்கம் தெரிவித்திருந்தது.
ஆனால் அமெரிக்கா அந்த உடன்படிக்கையிலிருந்து கடந்த வருடம் தன்னை வாபஸ் பெற்றுக்கொண்டு ஈரானுக்கு எதிரான தடைகளை மீள நடைமுறைப்படுத்தியதையடுத்து ஈரான் பதிலடி நடவடிக்கையாக அந்த உடன்படிக்கையின் கீழான உறுதிப்பாடுகளை மீறும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.
"ஈரான் சுபீட்சமான நாடாக வருவதற்கு விரும்பினால் அது என்னுடன் இணக்கமானதாக இருக்க வேண்டும்" எனக் கூறிய ட்ரம்ப்இ "ஆனால் அவர்கள் ஐந்து அல்லது ஆறு வருடங்களில் தாம் அணு ஆயுதங்களைப பெற முடியும் என நினைப்பார் களாயின் அதனை அவர்களால் ஒருபோதும் செய்ய முடியாது" என்று தெரிவித்தார்.
அவர் 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது அமெரிக்காவை மீண்டும் மாபெரும் ஒன்றாக மாற்றுவது தொடர்பில் தன்னால் முன்வைக்கப்பட்ட சுலோகத்தை பிரதிபலிக்கும் வகையில் "நாங்கள் ஈரானை மாபெரும் ஒன்றாக மாற்றுவோம்" என அவர் தெரிவித்தார்.
மேற்படி ஊடகவியலாளர்களுடனான சந்திப்பையடுத்து டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில்இ ஈரானுக்கு எதிரான பிரதான மேலதிக தடைகள் இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிறிதொரு நிலைப்பாடொன்றை கொண்டிருந்த நிலையில் அவர் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து நகர்ந்து அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் செயற்பாட்டில் களம் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஈரானுடன் நிபந்தனை எதுவுமின்றி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அதனை ஈரான் வார்த்தை ஜாலம் எனத் தெரிவித்து நிராகரித்திருந்தது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ஆளற்ற விமானமொன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றநிலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது