அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் (வயது 73), மிகப்பெரிய கோடீசுவரர். இவர், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்தன.
இப்படி அவர் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் எழுப்பினர். ஆனால் அவற்றையெல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன், இந்தப் புகார்களையெல்லாம் கடந்து டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகி, அனைவரையும் வியக்க வைத்தார்.
இப்போதும் அடுத்த ஆண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக டிரம்ப் சில தினங்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், டிரம்ப் மீது பெண் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஒருவர் கற்பழிப்பு புகார் எழுப்பி உள்ளார். ஜீன் கேரல் (வயது 75), என்ற அந்த பெண் எழுத்தாளர் இதுபற்றி ‘நியூயார்க்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள் ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
டிரம்ப் அப்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்து வந்தார். அவரை நான் மேன்ஹாட்டன் நகரில் பெர்க்டார்ப் குட்மேன் சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்தேன்.
அப்போது எனக்கு வயது 52. டிரம்புக்கு வயது 50 இருக்கும். அவர் என்னிடம், எனது சினேகிதிக்காக நான் ஒரு பரிசு வாங்க வந்திருக்கிறேன். என்ன பரிசு வாங்கலாம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். பின்னர் அவர் ஒரு இளஞ்சிவப்பும், சாம்பல் நிறமும் கலந்த உடையை (பாடி சூட்) தேர்ந்தெடுத்து வாங்கினார். அந்த உடையை நான் அணிந்து காட்டுமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
நாங்கள் உடை மாற்றும் அறைக்குள் சென்றோம். அங்கு டிரம்ப் என் மீது பாய்ந்தார். அடுத்த 3 நிமிடங்களில் அவர் என்னை பலாத்காரம் செய்தார். அவர் என் இரு கைகளையும் பற்றி, இரண்டாவது முறையும் சுவர் மீது தள்ளி என்னை கற்பழித்தார்.
இதுபற்றி நான் எனது நண்பர்கள் 2 பேரிடம் கூறினேன். அவர்கள் போலீசில் புகார் செய்யுமாறு ஆலோசனை சொன்னார்கள். இன்னொருவரோ, இதை இத்துடன் விட்டு விடுங்கள். யாரிடம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். டிரம்ப் 200 வக்கீல்களை வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்களை கொன்று புதைத்து விடுவார் என்றார்.
டிரம்ப் தான் நான் சந்தித்த கடைசி அருவருப்பான மனிதர். அந்த சம்பவத்துக்கு பின்னர் என் வாழ்நாளில் நான் யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டது இல்லை.
இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டு அமெரிக்காவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “என் வாழ்நாளில் நான் இந்தப் பெண்ணை சந்தித்ததே இல்லை. இந்தப் பெண் புதிய புத்தகம் ஒன்றை விற்க முயற்சிக்கிறாள். அதுதான் அவளது நோக்கம். இது கற்பனை கதை பிரிவில் வைத்து விற்க வேண்டியதாகும்” என குறிப்பிட்டார்