ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட்
21 Jun,2019
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.
இதற்கிடையே, ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் அரசு சுட்டு விழ்த்தியது என குற்றம்சாட்டியது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானை எச்சரிக்கும் விதமாக தனது டுவிட்டரில் செய்தி ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த டுவிட் அணு ஆயுத பலம்மிக்க அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.