டொனால்ட் ட்ரம்பின் பெயரைக் கொண்ட புதிய குடியிருப்பு பிரதேசம் இஸ்ரேலால்
18 Jun,2019
ஜனாதிபதி பெஞ்ஜமின் நெட்டன்யாஹு தனது நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் பிராந்தியத்திலுள்ள புதிய குடியிருப்பு பிரதேசத்திற்கு அமெரிக்க ஜனாதிபதியின் பெயரை சூட்டி அதனை வைபவரீதியாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துள்ளார்.
அந்தப் பிராந்தியமானது பொதுவாக சர்வதேச ரீதியில் சிரியாவின் பிராந்தியமாக கருப்படுகின்ற நிலையில் அது தொடர்பில் இஸ்ரேலின் இறைமையை அங்கீகரிக்க டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்துக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே அதற்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்த ‘ட்ரம்ப் ஹைட்ஸ்" பிராந்தியத்தை கட்டமைப்பதற்கான பணிகள் இன்னும் ஆரம்பமாகாத நிலையில் ட்ரம்பின் பெயர் மற்றும் அமெரிக்க, இஸ்ேரலிய கொடிகளைக் கொண்ட அடையாள சின்னம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அந்தக் குடியிருப்பு பிராந்தியம் வானுயர்ந்த குடியிருப்புக் கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் குழிப்பந்தாட்ட மைதானம் என்பனவற்றை உள்ளடக்கி நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்தக் குடியிருப்பு பிரதேசத்தின் பகிரங்க திரைநீக்கத்திற்கு சட்டபூர்வமான அதிகாரம் எதுவும் கிடையாது என அதன் எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இஸ்ரேலானது கோலன் ஹைட்ஸ் பிராந்தியத்தை 1967 ஆம் ஆண்டு மத்தியகிழக்குப் போரின் போது சிரியாவிடமிருந்து கைப்பற்றியிருந்தது. அதனை அந்நாடு 1981 ஆண்டில் தன்னுடன் இணைத்துக்கொண்ட நிலையில் அந்தப் பிராந்தியத்தை இஸ்ரேலின் இறைமைக்குரிய பிராந்தியமாக அங்கீகரித்த முதலாவது நாடாக அமெரிக்கா விளங்குகிறது.
''இது வரலாற்று முக்கியத்துவமிக்க தினமாகும்" எனத் தெரிவித்த பெஞ்ஜமின் நெட்டன்யாஹு, ''ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலின் ஒரு நண்பராவார்" என்று கூறினார்.
மேற்படி திரைநீக்க வைபவத்தில் அமெரிக்கத் தூதுவர் டேவிட் பிரைட்மான் கலந்துகொண்டார். கோலன் ஹைட்ஸிலுள்ள புதிய குடியிருப்பொன்றுக்கு ட்ரம்பின் பெயரை சூட்டுவதாக இஸ்ரேலிய பிரதமர் கடந்த ஏப்ரல் மாதம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கோலன் ஹைட்ஸ் பிராந்தியத்தில் குடியிருப்பை ஸ்தா பிப்பது தொடர்பான பெஞ்ஜமின் நெட்டன்யாஹுவின் தீர்மானத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.