நியூசிலாந்து மசூதி தாக்குதல் - குற்றங்களை ஒப்புக்கொள்ளாத சந்தேக நபர்
14 Jun,2019
கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் நடந்த தாக்குதல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய சந்தேக நபர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக 51 பேரை கொலை செய்தது, 40 பேர் மீது கொலை முயற்சி, ஒரு பயங்கரவாத குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பிரென்டன் டாரன்ட் மீது பதியப்பட்டுள்ளன.
29 வயதாகும் ஆஸ்திரேலியரான பிரென்டன் சிறையில் இருந்து காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது வழக்குரைஞர் வாதத்தை எடுத்து வைத்தபோது பிரென்டன் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: "தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது"
நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்க பாகிஸ்தானில் தேவாலயம் எரிக்கப்பட்டதா?
கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்காக கூடியிருந்த முஸ்லிம்கள் மீது ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
நியூசிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டு வைக்கப்படுவது இதுவே முதல்முறை.
இந்த தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் பாதிப்புக்குளானோரின் உறவினர்கள் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்தனர். பிரென்டன் வழக்குரைஞர் ஷேன் டைட், பிரென்டன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மறுப்பு தெரிவித்த போது நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது பலர் கண்ணீர் சிந்தினார்கள் என்கிறார் பிபிசி சிட்னி செய்தியாளர் ஹைவெல் கிரிஃபித்.
அடுத்த ஆண்டு மே மாதம் நான்காம் தேதி வரை விசாரணை நடக்கும் என தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி கேமரான் மாண்டெர், ஆகஸ்ட் 16-ம் தேதி நடக்கும் வழக்கு ஆய்வு விசாரணை நடைபெறும் வரை பிரென்டனை சிறையில் வைக்க நீதிபதி மாண்டர் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டார்.
கடந்த வாரம், இந்த வழக்கின் சந்தேக நபர் குறித்த புகைப்படங்களை வெளியிடுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது .
நியூசிலாந்தின் கருப்பு தினம்
கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதி மற்றும் லின்வுட் இஸ்லாமிய மையம் ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் சந்தேக நபர் மார்ச் 15-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
முதல் அல் நூர் மசூதிக்கு சென்று வண்டியை நிறுத்திவிட்டு மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தத் துவங்கினார். பிராதான வாயில் வழியில் நுழைந்த அவர் ஐந்து நிமிடங்களுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தத் துவங்கினார். இந்த நிகழ்வுகள் அனைத்துமே அந்நபர் தனது தலையில் கட்டியிருந்த கேமரா மூலமாக பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார் எனக் கூறப்படுகிறது.
அதன் பிறகு 5 கி.மீ தொலைவில் உள்ள லின்வுட் மசூதிக்குச் சென்று இந்த சந்தேக நபர் மேலும் பலரை கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ''இந்த தாக்குதல் நாட்டின் கருப்பு தினங்களுள் ஒன்று'' என்றார்.
தற்போது இந்த சந்தேக நபர் ஆக்லாந்து சிறையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறை நியூசிலாந்தின் கடுமையான சிறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது