ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயக்கைதி தான்.!! டிரம்ப் கருத்து
29 Apr,2026
ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார். போருக்கு தீர்வு காண தெரிவித்துள்ள சமீபத்திய முன்மொழிவில் அணுசக்தி விவகாரம் குறித்த பேச்சுவார்த்தையை தள்ளி வைத்து விட்டு, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஈரான் கேட்டு கொண்டுள்ளது.
ஆனால் அமெரிக்கா இதனை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஈரான் நாட்டிடம் அணுஆயுதங்கள் இருந்தால், ஒட்டுமொத்த உலகமும் பணய கைதியாகிவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.
ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது சரி என்று நினைக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்றே அவருக்குத் தெரியவில்லை. ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், ஒட்டுமொத்த உலகமும் பணய கைதிகளாகப் பிடிக்கப்பட்டு விடும் என்று டிரம்ப் ஒரு சோஷியல் மீடியா போஸ்ட்டில் குறிப்பிட்டு உள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பதற்காக அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கடற்படை முற்றுகைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள், தீவிரமான பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளின் பின்னணியில் இந்த கருத்தை அமெரிக்க அதிபர் கூறி இருக்கிறார். இதன் மூலம் அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஈரான் முற்றிலும் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி கூறி இருக்கிறார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க -இஸ்ரேல் போரை விமர்சித்த ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸை, டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். தெஹ்ரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதற்கு இந்தப் போர் நடவடிக்கை அவசியமான ஒன்று என்று டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே ஈரானுக்கு எதிரான தற்போதைய அமெரிக்க-இஸ்ரேலியப் போர் கச்சா எண்ணெய் விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து, இந்த மோதலில் நேரடியாகப் பங்கேற்க மறுப்பது அல்லது ஹோர்முஸ் ஜலசந்தியை பலவந்தமாக மீண்டும் திறக்க உதவ மறுப்பது தொடர்பாக ஐரோப்பிய நட்பு நாடுகளைப் பற்றி டிரம்ப் குறை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.