அமெரிக்க கடற்படைச் செயலாளர் திடீர் பதவி விலகல்
23 Apr,2026
ஈரான் மீதான போர் மற்றும் கடல்வழி முற்றுகை தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் ஜான் பீலன் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.
பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பீலனின் விலகல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, கடற்படை துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த 25 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஹங் காவோ தற்காலிகச் செயலாளராகப் பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகரான ஜோன் ஃபீலன், ஜனாதிபதி ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பெரும் நிதி வழங்கியவர். இராணுவ அனுபவம் இல்லாத போதிலும் கடந்த 2025-ல் இப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.
ட்ரம்ப் அறிவித்த "கோல்டன் ஃபிளீட்" என்ற அதிநவீன போர்க்கப்பல் வரிசையை உருவாக்குவதில் ஏற்பட்ட சுணக்கமே இவரது பதவி விலகலுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
அதிகாரிகள் நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் பொறுப்பேற்ற பிறகு, ராணுவத்தின் உயர்மட்டப் பதவிகளில் இருந்த டஜன் கணக்கான அதிகாரிகளை அதிரடியாக நீக்கி வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஜான் ஃபீலனும் இணைந்துள்ளார்.