அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் - ஈரான் மிரட்டல்
18 Apr,2026
இஸ்ரேல் - லெபனான் நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நீரிணையை மூடி விடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டு, வர்த்தகம் மற்றும் கப்பல்களின் முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக உள்ளது. எனினும் ஈரானைப் பொறுத்தமட்டில் கடற்படை முற்றுகையானது தொடர்ந்து முழு வீச்சில் நடைமுறையில் இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.
இவரின் இந்த அறிவிப்பு ஈரான் தரப்பை கோபம் கொள்ள செய்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் பேசுகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் முன்வைத்த கூற்றுகள் பொய்யானவை. மேலும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடருமானால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முற்றிலும் மூட தயங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்பாக தொடரும் சர்ச்சையின் காரணமாக, ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு "அதன் முந்தைய நிலைக்குத் திரும்பிவிடும்" என்று ஈரான் எச்சரித்து உள்ளது. போருக்கு முன்பு உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற முக்கிய நீரிணை வழித்தடத்தின் நிலை குறித்த, நிச்சயமற்ற நிலை உலக நாடுகள் மத்தியில் குழப்பத்தை அதிகரித்து உள்ளது. ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதும் மூடப்படுவதும் களத்தில் நிலவும் சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும். எதிரிகளின் நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு எப்படி செயல்பட வேண்டும் என எங்கள் ஆயுத படைகளுக்குத் தெரியும் என்றும் ஈரான் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.
லெபனானில் ஏற்பட்ட போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியை மீண்டும் திறந்திருப்பதாக ஈரான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையைத் தொடர்ந்தால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிடுவோம் என்று ஈரான் தரப்பு எச்சரித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.