கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவளித்த நிலையில் செவ்வாய்க்கிழமை (24) இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உட்பட 107 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
மேலும், கியூபா, ஈரான், மாலி, ப்ருண்டி, பெலாரஸ், ரஷ்யா , சூடான், நைஜர் உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
அதேவேளை, இத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ் முதலான 51 நாடுகள் பங்கேற்கவில்லை.
ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான தொடர்ச்சியாக நிலவி வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இடப்பெயர்வுகளை எதிர்கொண்டுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் அதிகமான உடல், உளப் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக, மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உலக நாடுகளின் ஆதரவை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திரட்டி வருகிறார். இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை உடனடியாக நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து, ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவளித்த நிலையில், அந்த நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “முழுமையான போர் நிறுத்தம் மற்றும் எங்கள் நாட்டு மக்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கான தெளிவான அழைப்புகளுடன் கூடிய எங்களின் தீர்மானத்தை ஐ.நா பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இவை சரியான நடவடிக்கை. அமைதியை ஏற்படுத்த எங்களின் நட்பு நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.