விமான விபத்தில் NASCAR ஜாம்பவான் கிரெக் பிஃபிள் குடும்பத்துடன் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி
19 Dec,2025
அமெரிக்காவின் பிரபல கார் பந்தய ஓட்டுநரும், NASCAR ஜாம்பவானுமான கிரெக் பிஃபிள் (Gregory Jack Biffle) அவரது குடும்பத்தினருடன் தனியார் பயணிகள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த துயரச் சம்பவம் அமெரிக்காவின் நார்த் கரோலினா (North Carolina) மாநிலத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த நேரத்தில், கிரெக் பிஃபிள் உடன் அவரது மனைவி கிறிஸ்டினா க்ரோசு, மகள் எம்மா, மற்றும் மகன் ரைடர் ஆகியோர் அந்த தனியார் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். விமானம் திடீரென விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த நால்வரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிஃபிள் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான க்ளீட்டஸ் மெக்ஃபார்லேண்ட் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை என்றும், அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NASCAR உலகில் பல்வேறு சாதனைகளை படைத்த கிரெக் பிஃபிள், தனது வேகமான ஓட்டத்தாலும், தைரியமான போட்டி அணுகுமுறையாலும் ரசிகர்களிடையே மிகுந்த புகழ் பெற்றவர். அவரது திடீர் மரணம், குறிப்பாக குடும்பத்துடன் நிகழ்ந்த இந்த விபத்து, ரசிகர்களையும் விளையாட்டு உலகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விமான விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு அல்லது காலநிலை மாற்றம் காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
NASCAR ரசிகர்கள், சக ஓட்டுநர்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் கிரெக் பிஃபிள் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தி, தங்களது இரங்கல் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.