ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்!
16 Dec,2025
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறிய நிலையில், உக்ரைன் தனது முதல் நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் நேட்டோவில்(NATO) இணைய முயன்றதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.
அந்த போர் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் மூலம் போர் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இறுதிகட்ட தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவருகிறது.
உக்ரைனும் அவ்வப்போது அதற்கு பதிலடி கொடுத்து வருவதுடன், முதன் முறையாக, நீருக்கடியில் சென்று தாக்கும் ட்ரோன் மூலம், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை சிதைத்து, ரஷ்யாவை கதற விட்டுள்ளது உக்ரைன்.
இந்த சூழலில், உக்ரைன் பாதுகாப்பு சேவையான SBU அதன் நீருக்கடியில் சென்று தாக்கும் "சப் சீ பேபி" ட்ரோன்கள் மூலம் நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கியது.
தாக்குதல் தொடர்பாக SBU வெளியிட்ட காட்சிகள், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பைக் காட்டியது.
துறைமுகத்தின் தளவமைப்பு மற்றும் கப்பல் தளவமைப்புகளைப் பயன்படுத்தி வீடியோவின் இருப்பிடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.