ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
10 Dec,2025
யுக்ரைன் அமைதித் திட்டத்திற்கு பதிலளிக்க ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருவதால், இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதற்காக, அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார்.
அத்துடன், அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப், யுக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ரஷ்யா தங்களிடம், நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வருவதாக யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆனால், தாங்கள் எதனையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அதற்காகவே தாங்கள் போராடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், யுக்ரைனின் சட்டம், அதன் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம் எந்த சலுகைகளையும் அனுமதிக்காது என்பதால், நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு தங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்று யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.