9 நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் விசாவை நிறுத்தியுள்ளது..
28 Sep,2025
சில நாடுகளுடனான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக உறவுகளில் உள்ள சிக்கல்களும் இந்த முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 9 நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐக்கிய அரபு அமீகரம் விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஏமன், லிபியா, சோமாலியா, லெபனான், கேமரூன், சூடான், உகாண்டா ஆகிய 9 நாடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
விசா நிறுத்திவைக்கப்பட்டதற்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இருப்பினும், பல்வேறு ஊடக அறிக்கைகள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துக்களின்படி, இந்த முடிவுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நாடுகள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடிகள் (Document Fraud), அடையாளத் திருட்டு (Identity Theft) மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் (Unlawful Migration) போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.