ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்புக்கு பின் அதிபர் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
19 Aug,2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினின் அலாஸ்கா சந்திப்பு முடிவு எதுவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் நடந்தது என்ன?
கடந்த 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கிய அம்சமாக, ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்காவின் அலஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது சிறப்பு விமானத்தில் அலஸ்கா சென்ற புதினுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார். சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் உற்சாகமான முகத்துடன் பயணித்தனர்.
இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மூடிய கதவுகளுக்கு பின்னால் சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் புதின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களின் பின்னணியில் சமாதானத்தை தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது. முதலில் புதினை பேசுமாறு டிரம்ப் சைகை காட்டினார். அதன் படி, தனது பேச்சை தொடங்கிய புதின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டார். போர் மூண்டதற்கான முதன்மை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று புதின் தெரிவித்தார். அதாவது நாட்டோவில் உக்ரைன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு தேவை என்று புதின் வலியுறுத்தினார்.