புதின் சந்திப்பு அலாஸ்காவில் நிகழ்வதும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அலாஸ்கா அமெரிக்காவின் ஒரு பகுதி என்றாலும், ரஷ்யாவுக்கு மிக அருகில் உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, அலாஸ்காவில் சந்தித்துப் பேச உள்ளனர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் பொதுமக்கள், ராணுவத்தினர் மற்றும் ரஷ்ய ராணுவத்தினர் என ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேச உள்ளனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா மற்றும் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள டான்பாஸ் ஆகிய பகுதிகள் ரஷ்யா வசம் இருக்கும் என்றும், கெர்சன், சபோரிஷியா பகுதிகள் உக்ரைனுக்கு விட்டுக்கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், உக்ரைனின் 20 சதவிகித நிலப்பரப்பை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உக்ரைன் நேட்டோவில் இணைய கூடாது, ராணுவ பலத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகள் விலக்கப்பட வேண்டும், ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதிகளில் இருந்து உக்ரைன் ராணுவம் வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகளையும் ரஷ்யா விதித்துள்ளது. உக்ரைன் போர் தவிர, ரஷ்யாவுடனான இந்தியா மற்றும் சீன நாடுகளின் வர்த்தகம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதின் சந்திப்பு அலாஸ்காவில் நிகழ்வதும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அலாஸ்கா அமெரிக்காவின் ஒரு பகுதி என்றாலும், ரஷ்யாவுக்கு மிக அருகில் உள்ளது. அலாஸ்காவின் மேற்கு முனை ரஷ்யாவின் கிழக்கு முனையிலிருந்து பெரிங் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் புதினுக்குப் பயணிக்க இது வசதியான இடமாக இருக்கிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் சமமான தூரத்தை ஏற்படுத்துவதன் மூலம், யாரும் மற்ற நாட்டின் நிலப்பரப்புக்குள் அதிக தூரம் பயணிக்க வேண்டியதில்லை.
இதையும் படிங்க: ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம்... ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை!
அலாஸ்கா ஒரு காலத்தில் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. 1867-ஆம் ஆண்டு ரஷ்யா அதை அமெரிக்காவுக்கு விற்றது. எனவே இந்த இடம் இரு நாடுகளின் கடந்தகால உறவுகளை நினைவூட்டுவதாகவும் பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி போன்ற நாடுகளில் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், அலாஸ்கா இரு நாடுகளுக்கும் இடையில் ஒருவித பாதுகாப்பான, நடுநிலையான சூழலை அளிக்கும் இடமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அவர் ஐ.சி.சி உறுப்பு நாடுகளுக்கு செல்ல முடியாது. 1998-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அமெரிக்கா இதுவரை உறுப்பு நாடாக சேரவில்லை. டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு புதினைச் சந்திப்பது இதுவே முதன்முறை ஆகும். ஆகையால், இந்தச் சந்திப்பு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.