அமெரிக்காவில் திடீரென ரத்து செய்யப்பட்ட 1000 விமானங்கள்.. என்ன காரணம் தெரியுமா?
08 Aug,2025
தாமதங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குவது மற்றும் பிற செலவுகளை ஈடுசெய்வதாக யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
உலகில் அமெரிக்கா நாடு மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உட்பட சுமார் 45 ஆயிரம் வணிக விமானங்கள் அங்கு இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் அமெரிக்க விமானங்களில் சுமார் 2.9 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். அதாவது 29 லட்சம்பேர் இது ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் பயணிகளாக உள்ளது, இது அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக ஆக்குகிறது.
அமெரிக்காவில் மூன்று முக்கிய சர்வதேச விமான நிறுவனங்கள் (டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ்) மற்றும் 8 கூடுதல் பெரிய உள்நாட்டு விமான நிறுவனங்கள் (ஸ்வவுத்வெஸ்ட், அலாஸ்கா, ஜெட்ப்ளூ உள்ளிட்டவை) உள்ளன
இந்த நிலையில் புதன்கிழமை அன்று, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யூனிமேடிக் (Unimatic) என்ற தொழில்நுட்ப அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதனால் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர்.
இந்த தொழில்நுட்பக் கோளாறு பல மணி நேரம் நீடித்தது. ஆனால் இது விமானத் துறையில் சமீபத்தில் எழுந்த சைபர் பாதுகாப்பு பிரச்னைகளுடன் தொடர்புடையது அல்ல என்று நிறுவனம் தெரிவித்தது. பயணத் தடங்களை கண்காணிக்கும் FlightAware இணையதளத்தின்படி, யுனைடெட் ஏர்லைன்ஸின் 35% விமானங்கள் தாமதமாகின.
தாமதங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குவது மற்றும் பிற செலவுகளை ஈடுசெய்வதாக யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.