பாலஸ்தீன நாடு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை - ஹமாஸ்
04 Aug,2025
சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
2007 முதல்; காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன.
இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாவிட்டால் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹமாஸ் தன்னிடமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதியை காண்பிக்கும் வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது.
எவியதார் டேவிட் என்ற பணயக்கைதியின் வீடியோவையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது, மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் அவர் ஒரு குழியை வெட்டுகின்றார், இந்த குழி எனக்கானது என அவர் தெரிவிக்கின்றார்.
பணயக்கைதிகளும் பட்டினி கிடக்கின்றார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்த்தீனம் உருவாகாமல் ஆயுதங்களைக் கைவிடப்போவதில்லை என்று ஹமாஸ் கூறுவது மிகவும் சிக்கலானது.
முதலாவது, ஜெருசலேம் நகரில் இருக்கும் முஸ்லீம்களின் அல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்திருக்கும் அதேவிடத்தில் யூதர்களின் வணக்கத்தலமும் இருக்கின்றது. இஸ்லாமியர்களுக்கு இப்பகுதி எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு முக்கியமானது யூதர்களுக்கு. ஆகவே ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்த்தீனம் என்பது ஆரம்பத்திலேயே சிக்கலாகப் போகிறது.
அடுத்தது, இராணுவ ரீதியில் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ஹமாஸினால் சுதந்திரமான பலஸ்த்தீனத்தை ஆயுத ரீதியில் அடைந்துகொள்வது சாத்தியமானதா? இன்று சர்வதேசத்தில் பலஸ்த்தீனர்களுக்குச் சார்பாக திரும்பியிருக்கும் நிலைப்பாடானது அங்கிருக்கும் மக்களின் பட்டிணிச் சாவை ஒட்டிஏற்படுத்தப்பட்டது என்பதே ஒழிய ஹமாஸின் இராணுவ வல்லமையினால் ஏற்பட்டதொன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் பலஸ்த்தீன மக்கள் தமது உயிர்த் தியாகத்தினாலும், குருதியினாலும் சர்வதேசத்தில் ஏற்படுத்திய இத்திருப்பத்தை ஹமாஸ் தனது பிடிவாதத்தினால் நீர்த்துப் போகச் செய்ய எத்தனிப்பதாகவே எனக்குப் படுகிறது.
கிழக்கு ஜெருசலேமில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, சர்வதேசம் விரும்பும் சுதந்திரப் பலஸ்த்தீனம் அல்லது இரு தேசக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டு பலஸ்த்தீனர்களுக்கான தீர்வை வழங்குவதை விடுத்து ஆயுதப் போராட்டத்தினை நீட்டித்து அழிவுகளையே ஹமாஸ் எதிர்ப்பார்ப்பதாக எனக்குத் தோன்றுகிறது.