இந்திய பொருளாதாரம் செத்த பொருளாதாரம்: அதிபர் டிரம்ப் , பாகிஸ்தானுக்கு சலுகை
01 Aug,2025
இந்தியாவின் பொருளாதாரம் செத்த பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரிக்கு மேல் வரி விதிக்கும் அதே வேளையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சலுகை மேல் சலுகை வழங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள் களுக்கு 25 சதவீத வரி மற்றும் கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். தற்போது இந்திய பொருளாதாரத்தை செத்த பொருளாதாரம் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
ஈரானிடம் பெட்ரோல் வாங்கிய 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை
இதுபற்றி டிரம்ப் கூறும்போது, ‘இந்தியா ரஷ்யாவுடன் சேர்ந்து என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் இரண்டு நாடுகளும் தங்களின் மோசமான பொருளாதார நிலையை இணைந்து இன்னும் மோசமாக்கும். அவர்களது பொருளாதாரம் செத்த பொருளாதாரம். நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வர்த்தகத்தையே செய்துள்ளோம். ஆனால் அவர்களின் வரிகள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடுமையானது மற்றும் அருவருப்பானது.
எல்லாம் நல்லதல்ல! எனவே, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியா 25 சதவீத வரியையும், கூடுதலாக அபராதத்தையும் செலுத்தும்.உக்ரைனில் நடைபெறும் கொலைகளை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில், இந்தியா எப்போதும் ரஷ்யாவிடமிருந்து கணிசமான அளவு ராணுவ தளவாடங்கள் மற்றும் எரிசக்தி பொருட்களை வாங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,20 நிறுவனங்கள் ஈரானுடன் தடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இதில், 6 இந்திய நிறுவனங்கள் அடக்கம். அந்த நிறுவனங்கள் ஈரானில் இருந்து பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் அல்லது பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. இதனால், அந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது,என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, அல்கெமிக்கல் சொல்யூஸ்ஷன் பிரைவேட் லிமிடெட், குளோபல் இண்டஸ்டிரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட், ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட், ரம்னிக்லால் எஸ். கோசலியா அண்ட் கம்பெனி, காஞ்சன்ஸ் பாலிமர் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்காவில் இனி வணிகம் செய்ய முடியாது.