தரையிலிருந்து கப்பலை தாக்கும்; ஜப்பான் குறுகிய தூர ஏவுகணை சோதனை
25 Jun,2025
ஜப்பான், சீனா இரு நாடுகளுமே சென் சாகு தீவை சொந்தம் கொண்டாடுவதால் பிராந்திய அளவிலான பிரச்னை உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கும் விதமாக ராணுவ திறனை வலுப்படுத்தும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. அதன்ஒரு பகுதியாக அண்மையில் டைப்-12 வகை கடலோர பாதுகாப்பு ஏவுகணையை ஜப்பான் காட்சிப்படுத்தி இருந்தது. இது நீண்ட தூரம் தாக்கும் திறன் கொண்ட, நிலத்தில் இருந்து இயக்கப்படும் கடல்சார் பாதுகாப்பு ஏவுகணை. இது சுமார் 1,000 கிமீ தூரத்தில் உள்ள எதிரி போர்க்கப்பல்களை கண்டுபிடித்து தாக்கும் திறன் கொண்டது.
இந்நிலையில் ஜப்பான் முதன்முறையாக நேற்று தன் சொந்த மண்ணில் குறுகிய தூர ஏவுகணை சோதனையை நடத்தியது. ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் உள்ள ஷிசுனை தளத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து டைப்-88 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த டைப்-88 ஏவுகணை, தரையில் இருந்து கப்பல்களை தாக்கும் திறனுடையது. மேலும் இது மலைப்பகுதிகளை கடந்து சென்று குறுகிய உயரத்தில் பறந்து தாக்கும் திறன் கொண்டது.