அமெரிக்கா தாக்கினாலும்.. எங்கள் பணிகளை நிறுத்த மாட்டோம்.. ஈரான் அணுசக்தி அமைப்பு
22 Jun,2025
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுமே மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் இப்போது அமெரிக்கா நேரடியாக இந்த மோதலில் இறங்கியுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தங்கள் அணு சக்தி பணிகளைப் பாதிக்காது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே பதற்றம் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் ஈரான் இடையே மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வந்தன.. ஏவுகணை, டிரோன்கள் என்று தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாகச் சொல்லியே இஸ்ரேல் இந்த தாக்குதல்களைத் தொடங்கியது. ஈரானின் பல அணுசக்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தின. இருப்பினும், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்தே வந்தது. மற்றொரு பக்கம் அமெரிக்காவும் ஈரானைச் சரணடையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அமெரிக்கா தாக்குதல்
இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஈரான் மீது நேரடியாக அமெரிக்காவே தாக்குதல் நடத்தியது. ஈரானின் மூன்று அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் வெடிகுண்டு எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் குண்டுகளை வீசியுள்ளன. இருப்பினும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தங்களது பணிகளை ஒருபோதும் பாதிக்காது என்றே ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி ஆய்வை தேசிய பணிகள் எனக் குறிப்பிட்டுள்ள ஈரானின் அணுசக்தி அமைப்பு, அதை நிறுத்த போவதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அதேநேரம் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதல்கள் குறித்த சேத விவரங்களை ஈரான் வெளியிடவில்லை.
ஈரானின் அணுசக்தி அமைப்பு, தனது நாட்டின் அணுசக்தித் திட்டங்களை எந்த வகையிலும் நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்புவதாக இருக்கிறது.
ஈரான் கடந்த சில ஆண்டுகளாகவே அணுசக்தி ஆய்வை தீவிரப்படுத்தி வந்தது. அணு ஆயுதங்களை உருவாக்கத் தேவையான செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை அதிகளவில் உற்பத்தி செய்து வந்தது. இதே வேகத்தில் ஈரான் யூரேனியத்தை செறிவூட்டினால் இன்னும் சில காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்கத் தேவையான நிலையை அடைய முடியும். இருப்பினும், ஈரான் தான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை இது அணு சக்தி மின் உற்பத்தி தொடர்பான ஆய்வுகள் என்றே கூறி வந்தது.
மேலும், ஈரான் அமெரிக்கா இடையே அணு ஆயுத பேச்சுவார்த்தையும் நடந்தது. அதாவது அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈரான் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு ஒப்பந்தம் போட அமெரிக்கா முயன்றது. இருப்பினும், அதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான் திடீரென கடந்த வாரம் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. அதில் தான் இப்போது அமெரிக்காவும் உள்ளே வந்துள்ளது. அமெரிக்கா உள்ளே வந்துள்ளதால் பதற்றம் பல மடங்கு அதிகரிப்பதாகவே இருக்கிறது.