ஈரானுக்கு எதிராக களமிறங்கும் அமெரிக்கா.. உத்தரவுக்கு காத்திருக்கும் படைகள்!
18 Jun,2025
இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்கா தலையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான யோசனையில் டிரம்ப் அழ்ந்திருப்பதாகவும், விரைவில் தாக்குதலுக்கான உத்தரவு கொடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இஸ்ரேலிய வெளியுறவு கொள்கை நிபுணர் பேராசிரியர் அம்னோன் ஆரன் பிபிசி ரேடியோ 5 லைவ்வில் பேசுகையில், "டிரம்பிடமிருந்து விரக்தியான வார்த்தைகள் வெளிவந்தவாறு இருக்கிறது. இது, அவர் ஒரு முக்கியமான எல்லையை தாண்டி விட்டதை உணர்த்துகின்றன. இதனால் பின்வாங்குவது மிகவும் கடினம் போல தெரிகிறது. இந்த மோதல் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா போரில் ஈடுபடுவதற்கு மிக அருகில் உள்ளது" என்று கூறியுள்ளார்.
அதேபோல அமெரிக்காவுக்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் மைக்கேல் ஓரன், "மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் இருக்கின்றன. இதன் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், டிரம்ப் போரில் தலையிடலாம். நேற்றுவரை போர் நிறுத்தம் குறித்து பேசிக்கொண்டிருந்த அவர், தற்போது திடீரென போரின் முடிவை பற்றி பேச தொடங்கியுள்ளார்" என்று கூறியுள்ளார்.
அவர் சொல்வது உன்மைதான். ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் "எனது இலக்கு ஒரு முடிவு. உண்மையான முடிவு! போர் நிறுத்தம் அல்ல" என்று கூறினார். மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று மேற்கு நாடுகளின் தலைவர்கள் பலர் கேட்டுக்கொண்டிருந்தனர். இதற்கிடையில்தான் முடிவு பற்றி டிரம்ப் பேசியிருக்கிறார். அவர் பேச்சு ஒரு பக்கம் நிலைமையை மோசமாக்கி வரும் நிலையில், மறுபுறம், அமெரிக்க படைகளின் நடவடிக்கை கவனம் பெற்றிருக்கிறது.
அதாவது, அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு நகர்ந்தப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று நாட்களில் அமெரிக்காவின் விமான தளங்களில் இருந்து குறைந்தது 30 போர் விமானங்கள் ஐரோப்பாவிற்கு மாற்றப்பட்டுள்ளன. இதனை பிபிசி செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. இந்த விமானங்கள் எல்லாம் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறக்கப்பட்டிருக்கிறதா? என்று கேட்டால் அதற்கான தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த மோதலுக்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஏனெனில் டிரம்ப் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை. ஈரான் நாட்டு தலைவர் அலி காமெனி குறித்து கூறுகையில், "அவர் எங்களுக்கு ஒரு எளிய இலக்கு தான். ஆனால் அவர் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். அவரை நாங்கள் கொல்ல விரும்பவில்லை. பொதுமக்கள் மீதோ அல்லது அமெரிக்க ராணுவ வீரர்கள் மீதோ ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது" பேசியிருக்கிறார்.
இந்த பேச்சால் ஈரான் சூடாகியிருக்கிறது. "அமெரிக்காவின் இராணுவ தலையீடு ஈடு செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும். ஈரான் நாட்டு மக்களையும், வரலாற்றையும் அறிந்தவர்கள் இந்த நாட்டை மிரட்டும் தொனியில் பேச மாட்டார்கள். ஈரான் மக்கள் சரணடைபவர்கள் அல்ல" என் காமெனி பதிலடி கொடுத்திருக்கிறார். எனவே இதை கேட்டுக்கொண்டு அமெரிக்கா சும்மா இருக்காது. நிச்சயம் எதிர் நடவடிக்கையில் ஈடுபடும்.