இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் அணுஆயுத தாக்குதல் நடத்தினால் எங்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இஸ்ரேல் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு உள்ள நிலையில் இஸ்ரேல் மீது பாகிஸ்தானால் அணுஆயுத தாக்குதல் நடத்த முடியுமா? என்ற பெரிய கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில் இது சாத்தியமா? இல்லையா? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகால பகை தற்போது போராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் திடீரென்று ஈரான் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலின் ராணுவ தளம், அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.
இதையடுத்து இஸ்ரேலும் தொடர்ந்து ஈரானை தாக்கி வருகிறது. ஈரான் தலைநகர் டெல்அவிவ்வில் ஏவுகணைகளை மூலம் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஈரானின் புரட்சிகர காவல் படையின் ஜெனரலும், ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்ப கவுன்சிலின் உறுப்பினருமான மொஹ்ஷின் ரெசாயி கூறியதாவது:
‛‛நாங்கள் இஸ்லாமிய ராணுவத்தை ஒன்றிணைத்து செயல்பட விரும்புகிறோம். துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளை ஒன்றிணைக்க விரும்புகிறோம். இஸ்ரேல் இப்போது ஈரான், ஏமன், பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளை குறிவைத்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் இப்போது ஒன்று சேராவிட்டால் அவர்கள் அனைவரும் இதேபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு போட்டால் பதிலுக்கு இஸ்ரேல் மீது அணுகுண்டு போட தயார் என்று பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது'' என்றார்.
கடந்த 14ம் தேதி பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது, ‛‛ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருசேர வேண்டும்'' என்று கூறினார். இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஈரானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இருந்தாலும் கூட இஸ்ரேல் அணுஆயுதத்தால் தாக்கினால் பாகிஸ்தான் அணுஆயுதத்தால் இஸ்ரேலை தாக்கும் என்ற ஈரான் அதிகாரியின் கூற்றுக்கு இன்னும் பாகிஸ்தான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் இதில் குழப்பம் உள்ளது.
இதற்கிடையே தான் பாகிஸ்தானால், இஸ்ரேலை அணுஆயுதம் கொண்டு தாக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு பதில் என்னவென்றால் ஆம் என்பது தான். ஏனென்றால் பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளது. அதேபோல் அணுஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணையும் இருக்கிறது. பாகிஸ்தானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மொத்தம் 3,000 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் ஷாகின் 3 ஏவுகணை (Shaheen 3 Missile) உள்ளது. இந்த ஏவுகணையால் 2,700 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து தாக்கும் தன்மை கொண்டது. இந்த ஏவுகணையை ஈரானில் இருந்து பயன்படுத்தும்போது நேரடியாக இஸ்ரேல் மீது அணுஆயுத தாக்குதலை நடத்த முடியும்.
மேலும் தற்போது பாகிஸ்தானில் ஷாகின் 2 ஏவுகணை பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் இந்த ஏவுகணையை ஈரானுக்கு பாகிஸ்தான் வழங்குமா? என்பது தான் இங்க கேள்வி. ஒருவேளை ஏவுகணையை வழங்கினாலும் அணுஆயுதத்தை வழங்குமா? என்பது மற்றொரு கேள்வி. ஏனென்றால் அணுஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் இன்னொரு நாட்டுக்கு அதனை வழங்குவது என்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இதனால் பாகிஸ்தானிடம் அணுஆயுதம் மற்றும் அதனை வைத்து இஸ்ரேலை தாக்கும் ஏவுகணை இருந்தாலும் கூட ஈரானுக்காக அதனை பயன்படுத்துமா? என்பதை வருங்காலத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் செல்லும் பாதையை பொறுத்து தான் அமையும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.