மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால், அமெரிக்கா ஹை அலர்ட் மோடில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம். மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வந்தது. ஹமாஸின் முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் மெல்ல முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உளவுத் துறை இதற்கிடையே மத்திய கிழக்கில் மற்றும் ஒரு அழிவுகரமான ராணுவ மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஈரான் மீது, குறிப்பாக ஈரானில் அணு ஆயுதங்கள் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவில் வெளியாகும் பிரபல வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளன. பின்னணி ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் அது ஆபத்தாக மாறும் என டிரம்ப் நினைக்கிறார்.
இதன் காரணமாகவே ஈரான் உடன் டிரம்ப் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றால் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமலேயே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் டிரம்பும் மத்திய கிழக்குப் பகுதிகள், குறிப்பாக ஈரானுக்கு அருகே உள்ள அமெரிக்க வீரர்களை வெளியேற்றப் போவதாகக் கூறியிருந்தார்.
அது ஆபத்தான இடமாக மாறுவதால் இந்த நடவடிக்கையை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஈராக்கில் இருந்து சில ஊழியர்கள் வெளியேற உத்தரவிட்டது. அதேபோல அமெரிக்கத் தளங்களில் இருந்து ராணுவக் குடும்பங்கள் வெளியேறவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. அங்குப் பதற்றம் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக உள்ளது. மீண்டும் வெடிக்கும் மோதல்? அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி செல்லவில்லை.
இது டிரம்ப் நிர்வாகத்திற்குக் கவலையளிப்பதாக உள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்பதில் டிரம்ப் திட்டவட்டமாக இருக்கிறார். இதனால் பேச்சுவார்த்தை சுமுகமாகப் போகவில்லை என்றால் மீண்டும் ஒரு மோதல் நடக்கும் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவுக்கும், ஈரான் நாட்டிற்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இஸ்ரேல் உடனடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகக் கடந்த மாதம் தகவல் வெளியாகியது.
அணுசக்தி பேச்சுவார்த்தைகள் முடிவடையவும்.. பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் ஏமாற்றமடைந்தால் இஸ்ரேலுக்கு ஒப்புதல் அளிக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுரேனியம் செறிவூட்டல் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் நேரடியாகவே பலமுறை அச்சுறுத்தியுள்ளார். அவர் சமீபத்தில் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் கூட, ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை நிறுத்த ஒப்புக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாகக் கூறியிருந்தார். செறிவூட்டப்பட்ட யுரேனியம் தான் அணு ஆயுத தயாரிப்பில் முக்கியமானதாக இருக்கிறது.
யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளை ஈரான் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், அதைக் கைவிடவே டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது டிரம்ப் நிர்வாகத்தின் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைத்துவிடும். மேலும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கவும் காரணமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா மீது ஏன் ஈரான் தாக்குதல் நடத்தும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.! இஸ்ரேலின் மிக பெரிய ராணுவ மற்றும் அரசியல் ஆதரவாளராக அமெரிக்கா இருப்பதால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தான் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருவதே உங்கள் சந்தேகத்திற்கான விடை. இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது என்பதே வரும் காலங்களில் உலக அரசியலையே தீர்மானிக்கப் போவதாக இருக்கும்.