லண்டன்: இங்கிலாந்தில், லிவர்பூல் கிளப் கால்பந்து அணியின் ப்ரீமியர் லீக் சாம்பியன்ஷிப் வெற்றி அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது நகர வீதியில் குழுமியிருந்த அந்த அணியின் ரசிகர்கள் மீது மினிவேன் ஒன்று மோதியதில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் காயமடைந்த 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 27 பேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் சிறுவர்கள். ஒரு நபரும், சிறுவர் ஒருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை இங்கிலாந்து ஊடக நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது. இந்தச் சம்பவம் இங்கிலாந்து நேரப்படி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள லிவர்பூல் நகரின் மையப்பகுதியில் லிவர்பூல் கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். இங்கிலாந்தில் அதிகார ரசிகர்களை கொண்ட அணிகளில் லிவர்பூல் முதலிடத்தில் உள்ளது. அதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வந்திருந்தனர்.
பலரும் தங்களது கால்பந்து ஹீரோக்களுக்கு உற்சாகம் தர வந்திருந்தனர். லிவர்பூல் அணியின் வீரர்கள் மற்றும் அந்த அணியின் நிர்வாக குழுவினர் திறந்தவெளி பேருந்தில் நின்றபடி பயணித்தனர். கடந்த 2020-ல் லிவர்பூல் அணி பட்டம் வென்ற போதிலும் கரோனா காரணமாக கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டன.
அதனால் இந்த முறை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இதில் பங்கேற்றனர். லிவர்பூல் நகரமே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது. வாணவேடிக்கை, மழை, மக்கள் என லிவர்பூல் அணியின் அணிவகுப்பு களைகட்டியது. இரவு நேர மேகத்தில் சிவப்பு நிற ஒளி படரும் அளவுக்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
அப்போது வேகமாக வந்த சாம்பல் நிற மினிவேன் ஒன்று வீதியில் திரண்டிருந்த ரசிகர்களின் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் ரசிகர்கள் காயமடைந்தனர். நான்கு பேர் வாகனத்தின் கீழ் சிக்கியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.
‘முதலில் சிலரை மோதிய பிறகு மினிவேன் நின்றது. அதில் சிலர் தூக்கி வீசப்பட்டனர். அந்த வேன் மிக வேகமாக வந்திருந்தது. பின்னர் ஆத்திரமடைந்த மக்கள் அந்த வாகனத்தின் கண்ணாடியை தாக்கினர். அதையடுத்து அந்த ஓட்டுநர், மினிவேனை இயக்கி மேலும் சிலரை மோதினார். பலரும் அச்சத்தில் கூச்சலிட்டனர். நான் எனது குடும்பத்துடன் சென்றிருந்தேன். எல்லோரும் அதை போலவே வந்திருந்தார்கள். நங்கள் எங்கள் அணியின் வெற்றியை கொண்டாட வந்த அப்பாவி மக்கள்’ என சம்பவத்தை நேரில் பார்த்த ஹாரி ரஷீத் என்பவர் கூறியுள்ளார்.
பின்னர் போலீஸார் தலையிட்டு கார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத தொடர்பு ஏதும் இல்லை என போலீஸார் கூறியுள்ளனர். இது தனிப்பட்ட ஒருவரின் செயல் என தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநர் பிரிட்டனை சேர்ந்தவர் என்றும். அவருக்கு 53 என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
‘மிகவும் மகிழ்ச்சிகரமான நாளில் படர்ந்த கருப்பு நிழல். இது விரும்பத்தகாத சம்பவம்” என லிவர்பூல் நகர கவுன்சில் தலைவர் லியம் ராபின்சன் தெரிவித்தார்.
“லிவர்பூலில் அரங்கேறிய காட்சிகள் பயங்கரமானவை. காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்ட அனைவரையும் எண்ணி இந்நேரத்தில் வருத்தம் அடைகிறேன். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அடுத்து விரைந்து செயல்பட்ட காவல் துறை மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி.
கடினமான காலங்களில் ஒன்றிணைந்து கரம்கோர்த்து நிற்பதில் இந்த நகரம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. லிவர்பூல் உடன் ஒட்டுமொத்த தேசமும் இந்நேரத்தில் துணை நிற்கும்” என இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அதுவரை இது தொடர்பாக நம்பகம் அல்லாத தகவல்களை பகிர வேண்டாம் எனவும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். லிவர்பூல் அணியும் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.