H1B விசா பற்றிய பஞ்சாயத்துகள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்கர் ஒருவர் "H1B விசா ஒரு மோசடி. அமெரிக்காவுக்கு எதற்கு இந்தியர்கள்?" என்று சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த பதிவு புதிய விவாதங்களை தூண்டியிருக்கிறது. உலகம் முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களால்தான் நகரங்கள் செழிப்படைந்துள்ளன. இப்படி இருக்கையில் இந்தியர்களை மட்டும் வெறுப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
அமெரிக்காவில் இந்தியர்கள் அவமானப்படுத்தப்படுவது இது ஒன்றும் புதிது அல்ல. ஆனால், டிரம்ப் அதிபராக தேர்வான பிறகு H1B விசா பற்றியும், அதன் மூலம் அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்கள் பற்றியும் தொடர்ந்து விமர்சனங்கள் அதிகரித்தன. இருப்பினும் இந்தியர்களின் திறமையை உணர்ந்த அமெரிக்க அரசு, இந்தியர்களை இன்னும் அங்கு பணிகளில் வைத்திருக்கிறது. இப்படி இருக்கையில்தான் H1B விசா பற்றியும், இந்தியர்களை பற்றிய விவாதம் சோஷியல் மீடியாக்களில் விவாதமாக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு காரணம் சீன் கார்பெண்டர் என்கிற அமெரிக்கர் தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்த விஷயம்தான். இசைக்கலைஞர் என்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர் என்றும் அடையாளப்படுத்தி கொண்ட இவர், வாஷிங்டன், டிசி விமான நிலையத்தில் மூன்று கேட் ஏஜென்ட்கள் இந்தியில் பேசுவதைக் கேட்டதாகக் கூறியுள்ளார். "டிசி விமான நிலையத்தில் எனக்குப் பின்னால் 3 கேட் ஏஜென்ட்கள் இந்தியில் பேசிக்கொள்வதை கேட்டேன். விமான நிலையங்களில் கேட் வேலை செய்ய இந்தியர்கள் ஏன் தேவை என்று சொல்லுங்கள்? H1B விசா ஒரு மோசடி" என்று சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.
பயணிகளை விமானத்தில் ஏற்றும் செயல்முறையை கண்காணித்தல், டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு, பயணப் பட்டியலில் இறுதி சரிபார்ப்பு, பயணிகள் சேவை, கேட் மாற்றங்கள், தாமதங்கள் பற்றி அறிவித்தல், முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி ஆகிய பணிகளை கேட் ஏஜென்ட்கள் செய்வார்கள்.
கார்பெண்டர் பதிவுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இந்த ஏஜென்ட்கள் H1B விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்தவர்கள் என்று தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருப்பதாக சிலர் விளக்கமளித்தனர். "H1B விசாவை கொண்டிருக்கும் ஒருவர் இந்த வேலையை பெற முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?" என்றும் பலர் சரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
"இந்திய வம்சாவளியை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் சரளமாக இந்தியை பேசுவார்கள். உங்கள் தாத்தா பாட்டியும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள்தான். உலகம் முழுவதும் இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது. இதில் என்ன பிரச்சனை?" என்று சிலர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
"இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் இங்கே கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை அட்டையை வைத்திருக்கிறார்கள். அவர்களின் மகன்/மகளும் இந்தியில் பேசுவார்கள்" என்றும்,
"அரைகுறையாக ஒரு விஷயத்தை கேட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் ஒரு விஷயத்தை கட்டமைப்பது முற்றிலும் தவறானது. இந்த வகையான பொறுப்பற்ற குப்பைகளைப் பரப்புவது நமது தேசத்தின் கட்டமைப்பைக் கிழித்துவிடுகிறது" என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.