துருக்கி பேச்சுவார்த்தைல் போர் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டன.
17 May,2025
இஸ்தான்புல்: ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் துருக்கி பேச்சுவார்த்தையை திடீரென புதின் புறக்கணித்தார். தனக்கு பதில் உதவியாளர்கள் குழுவினை புதின் அனுப்பி வைத்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த டிரம்ப், விரைவில் புதினை சந்தித்து பேசுவேன் என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரபு நாடுகளுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றார். முதலில், சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு சென்றார். அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் அதிபர் டிரம்ப், கத்தார் நாட்டின் தோஹா நகருக்கும் சென்றார். அங்குள்ள தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியவர். அதன் பின்னர் அங்கிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகருக்கு சென்றார். அந்நாட்டு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
நேற்று அபுதாபியில், அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரக தொழில் அதிபர்களை டிரம்ப் சந்தித்தார். அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய துறைகளின் தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். பின்னர், ஆபிரஹாமிக் குடும்ப இல்லம் என்ற வளாகத்துக்கு டிரம்ப் நேரில் சென்றார். அங்கு சர்வமத நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில், தேவாலயம், மசூதி, யூத வழிபாட்டு தலம் ஆகியவை அமைந்துள்ளன. அதனை பார்வையிட்ட டிரம்ப், அதன்பின்னர்
அரபு நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார்.
அப்போது டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதை ரஷ்ய அதிபர் புதின் திடீரென புறக்கணித்து விட்டார். அவருக்கு பதில் உதவியாளர்கள் குழுவினை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு டிரம்ப் பதில் அளித்து பேசுகையில், ரஷ்ய அதிபர் புதின் துருக்கி செல்லாமல் போனது எனக்கு வியப்பாக இல்லை. நான் இல்லாவிட்டால் அவர் அங்கு செல்ல மாட்டார். ரஷ்யா-உக்ரைன் போரால் வாரத்துக்கு 5 ஆயிரம் இளம் வயதினர் பலியாகி கொண்டிருக்கிறார்கள். எனவே, நாங்கள் போரை நிறுத்தப் போகிறோம். அங்கு போரை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இதைச்செய்ய இதுதான் சரியான நேரம் என்று நான் கருதுகிறேன். எனவே, விரைவில் புதினை சந்தித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவேன்.
என் மகள் டிபானிக்கு முதலாவது குழந்தை பிறந்துள்ளது. அழகான பேரனை பார்க்க இங்கிருந்து அமெரிக்கா செல்கிறேன்" என்று கூறினார். இதனிடையே ரஷ்யா உக்ரைன் இடையே துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.. அதேநேரம் ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளும் பரஸ்பரம் கணிசமான போர் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டன.