பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து.. விஞ்ஞானிகள்
12 May,2025
விண்வெளியில் சுற்றும் குப்பைகள் எப்போது வேண்டுமானாலும் நம் தலை மீது விழலாம் என்றும், விண்வெளி குப்பைகளால் செயற்கைக்கோள்களை ஏவ முடியாத சூழலும் எழுந்திருக்கிறது எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனை 'கெஸ்லர் சிண்ட்ரோம்' என்று கூறும் அவர்கள், நாம் பேராபத்தில் உள்ளதாகவும் வார்னிங் செய்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் வெறும் புனைக்கதையாக மட்டுமே இந்த கருத்து இருந்தது. ஹாலிவுட் படங்களிலும், காமிக்ஸ் கதைகளிலும்தான் விண்வெளி குப்பைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது நிஜமாகவே இதை எதிர்கொள்ளும் இடத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025ம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, 1 செ.மீ.க்கும் அதிகமான அளவில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமாக பெரிய குப்பைகள் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் 10 செ.மீக்கும் அதிகமான குப்பைகள் 50,000க்கும் அதிகமாக இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் இப்போது ஆக்டிவாக இருக்கும் விண்கலத்தை போட்டு தள்ளும் அளவுக்கு சக்திவாய்ந்தது. செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, ராக்கெட் ஏவுவதன் மூலம் வெளியேறும் குப்பை போன்றவைதான் பூமியை சுற்றியிருக்கும் விண்வெளி குப்பைகளுக்கு காரணம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் செயற்கைக்கொள் ஒன்று செயலிழந்தது. இது சிதைந்து சுமார் 100க்கும் அதிகமான பெரிய குப்பைகளை வெளியேற்றியது. இப்படி பல செயற்கைக்கோள்கள் செயலிழந்து குப்பைகள் உருவாகிறது. இதனால் நாம் விண்வெளியை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும். பூமியின் குறைந்த சுற்றுவட்ட பாதையில் தற்போது செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று குப்பைகள் அதிகரித்தால் இனி இந்த பகுதியை நம்மால் பயன்படுத்த முடியாது. அதாவது ராக்கெட்டை நம்மால் ஏவ முடியாது. இது எதிர்கால பிரச்சனை. ஆனால் நிகழ்கால பிரச்சனை என்னவெனில், இப்போது இருக்கும் குப்பைகளிலிருந்து செயற்கைக்கோள்களை காப்பாற்றுவதுதான்.
குப்பைகள் செயற்கைக்கோள்களை நெருங்கும்போது, செயற்கைக்கோளின் பாதையை நாம் மாற்றுகிறோம். இதனால் கணிசமான அளவுக்கு எரிபொருள் செலவாகிறது. அதே நேரம், இந்த மாதிரியான சமயத்தில் செயற்கைக்கோள்களிலிருந்து நம்மால் டேட்டாவை பெற முடியாது. உதாரணத்திற்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்துக்கொண்டிருக்கும் நேரத்தில் செயற்கைக்கோளிலிருந்து முக்கியமான தகவல் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில்தான் விண்வெளி குப்பைகள் செயற்கைக்கோளில் நெருங்குகின்றன. எனவே நாம் செயற்கைக்கோளை நகர்த்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
இதனால் போர் காலங்களில் முக்கியமான தகவல்களை பெற முடியாமல் போகலாம். இன்னொரு பிரச்சனை என்னவெனில், இந்த துகள்கள் செயற்கைக்கோள்களை தாக்கி எப்போது வேண்டுமானாலும் பூமியை நோக்கி விழ செய்யலாம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,200க்கும் அதிகமான விண்வெளி குப்பைகள் நமது பூமிக்குள் நுழைந்திருக்கிறது என்று கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் சில முழுமையாக எரியாமல் பூமிக்குள் விழுந்தது.
வட கரோலினாவில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டதும், கென்யாவின் முகுகு கிராமத்திற்கு அருகே ஒரு பெரிய பொருள் தரையில் விழுந்து கிடந்ததும் இதனால்தான். எனவே விண்வெளி குப்பைகளை குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியா அதிக அளவில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பவில்லை. ஆனால் அமெரிக்கா இதை செய்திருக்கிறது. எனவே இந்த பொறுப்பை அமெரிக்கா கையில் எடுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.