அனைத்து விமானங்களுக்கும் வான்வழியை திறந்துவிட்ட பாகிஸ்தான்
10 May,2025
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
இது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் நிலவியதால், இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வழியாக செல்ல பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியாவும் தங்களது வான் வழியை மூடியது. பாகிஸ்தான் தங்களது வான்வழி எல்லையை மூடியதால் பல்வேறு நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வழி வராமல் சுற்றிக்கொண்டு சென்றது.
இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதேபோன்று பாகிஸ்தான விமானங்கள், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்ல இந்திய வான் வழியை பயன்படுத்தாமல் சுற்றிக்கொண்டு சென்றது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் முடிவுக்கு வந்ததை அடுத்து பாகிஸ்தான் தங்களது நாட்டில் வான்வழி போக்குவரத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது.
போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியான உடனே பாகிஸ்தான் தங்களது வான்வழி எல்லையை திறந்து இருக்கிறது. அனைத்து விதமான வான் போக்குவரத்தும் திறக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கூறி இருக்கிறது. இதன் மூலம் பெரும் அளவில் பயணம் நேரம், எரிபொருள் செலவு மிச்சமாகும் என தெரிகிறது. எனினும் இந்தியா தங்களது வான்வழியை பாகிஸ்தானுக்கு இன்னும் திறப்ப்ம்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.